நாகர்கோவில், ஆக. 3 –
குமரி மாவட்டத்தில் கடல் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை ஆரஞ்சு வளர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி உட்பட தென் தமிழக மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 3 முதல் 7-ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 19 வினாடிகளுக்கு ஒருமுறை 1.6 மீட்டர் முதல் 1.9 மீட்டர் வரை உயரத்தில் பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை இந்த நிலை காணப்படும் காணப்படும்.
இது கள்ளக் கடல் என்பதால் கடற் பகுதிகளில் வசிக்கின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும். படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடையாமல் இருக்க போதுமான இடை வெளியிட்டு அவைகளை கட்டி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை இந்திய கடல்சார் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.