நாகர்கோவில், ஆகஸ்ட் 28 –
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் விநாயகர் சிலைகள் எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அந்த இடத்தில் மட்டுமே வைப்பதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் விநாயகர் ஊர்வலமும் கடந்த வருடம் நடந்த வழியாகத்தான் எடுத்து செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகருக்கு காலை, மாலை வேளையில் கொழுக்கட்டை, பொறி, அவல், சுண்டல் படைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளுக்கு விழா குழு சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை அறிவுரையை மீறப்படுகிறதா? என்று போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பூஜைக்கு வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் 30 மற்றும் 31ம் தேதி கரைக்கப்படுகிறது. இந்து மகா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட சிலைகள் நாகராஜா கோயில் திடலுக்கு நாளை (30ம் தேதி) கொண்டு வரப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தைவிளை கடலில் கரைக்கப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் மணவாளக்குறிச்சி பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள், சின்ன விளை கடலில் கரைக்கப்படுகிறது. சிவ சேனா சார்பில் கன்னியாகுமரி கடலிலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.
இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட சிலைகள், 31ம் தேதி கரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியம், நகரப் பகுதிகளில் தனித்தனியாக எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு இடங்களில் கரைக்கப்படுகிறது. இந்த சிலைகள் சங்குத்துறை கடல், ஞாலம் பள்ளி கொண்டான் அணை, கன்னியாகுமரி முக்கடல், மண்டைக்காடு கடல், திற்பரப்பு அருவி, மிடாலம் கடல், தேங்காய் பட்டணம் கடல், குழித்துறை தாமிரபரணி ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.


