நாகர்கோவில், ஜூன் 22 –
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் நுழைவு தேர்வு நேற்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வை எழுவதற்காக மொத்தம் 4,968 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக மாவட்ட முழுவதும் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளி, இந்து கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, டதி பள்ளி, ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, எஸ் எம் ஆர் வி மேல்நிலைப்பள்ளி, கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பி கே சி பழ விளை காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி போன்ற 10 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன.
தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் காலையிலே தேர்வு மையங்களில் குவிய தொடங்கினர். தேசிய தேர்வுகள் முகமையின் கடுமையான விதிமுறைகளை பின்பற்றி காலை 11 மணிக்கு மேல் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்களின் அனுமதி சீட்டு மற்றும் அதிகாரபூர்வ அடையாள அட்டைகள் ஒவ்வொன்றாக தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சுகள், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நீட் தேர்வின் கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் இந்த முறையும் தீவிரமாக பின்பற்றப்பட்டன. குறிப்பாக மாணவிகள் கம்மல், கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
மதியம் 1:30 மணிவரை மட்டுமே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. மதியம் 2 மணிக்கு தொடங்கி தேர்வு மாலை 5:20 மணி வரை நடைபெற்றது. மாணவர்கள் எந்த வித குழப்பமும் இன்றி தங்களுக்குரிய தேர்வு அறைக்கு சென்றனர்.
தேர்வு எழுத வந்த மாணவர்களை தவிர பெற்றோர்கள் உறவினர்கள் என வேறு யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் பிள்ளைகளை தேர்வு எழுத அனுப்பி வைத்துவிட்டு சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தேர்வு மையங்களுக்கு வழியே சாலையோரங்களிலும் மர நிழல்களிலும் காத்திருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



