மார்த்தாண்டம், அக். 27 –
குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான ஆசியாவிலேயே நீளம் மற்றும் உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உள்ளது. இது காமராஜர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் பாசன வசதிக்காக 1969-ம் ஆண்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் 1240 அடி நீளம், 107 அடி உயரம் கொண்டதாகும். தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை பார்வையிட நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பாலத்தின் மீது நடந்து செல்வதை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இந்த நிலையில் இந்த தொட்டி பாலத்தில் பல இடங்களில் பழமையான கைப்பிடி சுவர்கள் உடைந்து சேதம் ஆகியுள்ளன. அத்துடன் நடந்து செல்லும் பகுதியிலும் கீறல்கள் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், அரசு கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்ததுள்ளது. எனவே இந்த பாலத்தை சீரமைத்து, உடைந்த கைப்பிடி சுவர்களை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



