நாகர்கோவில், ஆகஸ்ட் 13 –
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள், இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர மருத்துவ முகாம் குறைபாடுகள், அதன் தீர்வுகள் தொடர்பாக மனு அளிக்க வந்தனர். அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துவிட்டு செல்லுங்கள் என்று அங்கிருந்த அலுவலர்கள் கூறியிருக்கின்றனர். அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் அரை முன் மாற்றுத்திறனாளிகள் திரண்டு இருந்தனர்.
திடீரென அலுவலர்கள் தங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலக கட்டிடத்தின் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகள் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரடியாக சந்தித்து மனு அளித்துவிட்டு தான் செல்வோம் என்று கூறி தொடர்ந்து நிர்வாக அலுவலக வாயிலில் அமர்ந்து இருந்தனர். இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் வில்சன் மற்றும் அருள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து சங்க பொறுப்பாளர்கள் கூறுகையில் குமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் சான்றுகள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் நீடித்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர்களை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து இருக்கிறோம்.
அதன்படி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்தோம். ஆனால் அலுவலர்கள் எங்களுக்கு முறையான பதில் தெரிவிக்காமல் அவமதிப்பு செய்ததை தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து எங்களது கோரிக்கை மனுவை அழிக்க இருக்கிறோம். மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவு முகாமில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை எளிதாக்க வேண்டும். தக்கலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் பயனாளிகள் அமரவும், சக்கர நாற்காலி பயன்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் மனு அளிக்க இருக்கிறோம் என்றனர்.



