நாகர்கோவில், ஜூன் 12 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி காட்டுதல் வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-25 ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் அனைவரும் 100 சதவீத உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள ஏதுவாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தரைத்தளத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மைய மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்கள், பொறியியல் படிப்புகள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், சட்டப் படிப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள், தொழிற்பயிற்சி சார்ந்த படிப்புகள் முதலான படிப்புகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் சார்ந்த ஆலோசனைகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 9944445202 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அல்லது நேரடியாக வருகை புரிந்தோ மாணவர்கள் தங்களுக்குத் தேவையான உயர் கல்வி சார்ந்த ஆலோசனைகளைப் பெற்று பயன்படுத்தலாம். இக்கட்டுப்பாட்டு அறை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.