நாகர்கோவில், நவ. 6 –
நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் யாக்கோபு மனைவி தங்கலட்சுமி (70). இவர்களது மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் மகன் சிகிச்சை பெற்று வந்ததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கலட்சுமி அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் உங்கள் மகனின் சிகிச்சைக்கு காப்பீடு திட்டம் தயார் செய்து தருவதாக கூறியுள்ளார். இதை தங்க லட்சுமி நம்பினார். தொடர்ந்து அந்த நபர் நீங்கள் அணிந்திருக்கும் நகையை கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள். நகை அணிந்து இருந்தால் காப்பீடு கிடைக்காது என்று கூறியுள்ளார்.
தங்க லட்சுமி தான் அணிந்திருந்த ஒன்றரை பவன் நகையை கழற்றினார். அப்போது அந்த நபர் நகையை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார். தங்கலட்சுமி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொள்ளையன் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நகை திருடியவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ கல்லூரியல் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரது குடியிருப்பில் புகுந்து 57 பவுன் நகை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.


