நாகர்கோவில், ஜூலை 10 –
குமரி மாவட்டம் முஞ்சிறை, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 110 விதியின் கீழ் தமிழ்நாட்டிற்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி விளையாட்டரங்கம் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பத்மநாபபுரம் சட்டமன்றம் திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட கல்லாடிமாமூடு பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இவ்விளையாட்டு மைதானத்தினை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனைத்தொடரந்து கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதி மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கல் முசாரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1.77 கோடி மதிப்பிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் லியோன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு அரங்கம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான முக்கிய நோக்கம் கிராமப்புற மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை தேசிய, மாநில அளவில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளாக மாற்றுவதற்கேயாகும். எனவே பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு பள்ளி மற்றும் பயிற்சி மையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



