நாகர்கோவில், ஜூன் 20 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரியில் கால்நடைகள், கோழிகளுக்கு நோய் தடுப்பு, நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்கிடவும், விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்திடவும், துறை வல்லுநர்களின் ஆலோசனை வழங்குதல், மத்திய மாநில அரசு திட்டங்களைக் காட்சிப்படுத்திடவும், கலந்து கொள்ளும் ஏழை விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை, தீவன விதைகள் வழங்கிடவும், கிடாரி கன்று பேரணி, சிறந்த 3 கிடேரி கன்று வளர்ப்பு, உரிமையாளர்களுக்கு மேலாண்மை நடைமுறை விருது வழங்கிடவும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் 108 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நாளை முதல் நடைபெற உள்ளது. தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முத்தலக்குறிச்சி கிராமத்தில் நாளை முதல் முகாமை பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அவர்களது பகுதியில் நடக்க உள்ள சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.