சிவகங்கை, செப். 28:
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், ஜீவா நகர், சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இப்பகுதிகளில் பட்டா வழங்கப்பட்டதாகவும், சிலர் ஏக்கர் கணக்கில் பட்டா பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மட்டும் பட்டா கோரிய நிலையில், மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க மறுத்து வருவதாக குற்றம்சாட்டினர்.
மேலும், குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



