நாகர்கோவில், ஆகஸ்ட் 30 –
குமரி மாவட்ட கடல் பகுதியில் மீன்வளத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர முயற்சி செய்கிறது. இதனை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கீழ மணக்குடி கடற்கரை கிராமத்தில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம். பி. கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கட கடலோர மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை அரசுக்கு எடுத்துக் கூற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். எந்த வகையிலும் கடல் வளத்தை அழிக்க முடியாது. தமிழக முதல்வரின் லண்டன் சுற்றுப்பயணத்தில் பல ஒப்பந்தங்களில் கையெழுத்து இட உள்ளார். தமிழ்நாடு தொழிலில் சிறந்து விளங்கி கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொழில்துறையில் முன்னேறி வருகிறது என்றார். நிகழ்ச்சியில் சாமிதோப்பு பால பிரஜாதிபதி அடிகளார், கடலோர வளர்ச்சி அமைதி குழு பங்கு தந்தை டென்சன் மற்றும் கீழமணக்குடி ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.



