உசிலம்பட்டி, ஜூன் 20 –
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வலியுறுத்தியும் 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள வைரவசுவாமி திருக்கோவிலில் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கீழடி விவகாரம் குறித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு திமுக தான் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள், திமுக தான் ஆட்சியிலும் இருக்கிறார்கள், இது மக்களை ஏமாற்றுகிற நாடக கம்பெனி நடத்தும் நாடகம். அதிகாரத்தை வைத்துள்ளவர்கள் முறையாக முறையிட்டு அதற்கு தகுந்த தீர்வு கண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரத்தைக் கையில் வைத்துக்
கொண்டு மக்களுக்காக நீலி கண்ணீர் வடிக்கிற விவகாரம் தான் இந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும். வெண்ணெய்யை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக உள்ளது கீழடி ஆர்ப்பாட்டம். மேலும் அதிகாரம் கையில் இருக்கிறது, 38 எம்.பி., நீங்க தான் இருக்கீங்க, நீங்க தான் முதல்வராக இருக்கிறீர்கள்.
டெல்லி போகும் போது வெள்ளைக் கொடி, வெள்ளை நிறக் குடை எல்லா சமாதான தூது எடுத்துப் போவது, இங்கு வந்து வீர வசனம் பேசுவது. இதை யார் மக்கள் நம்புவார்களா, யாரும் நம்ப மாட்டார்கள். அதனால் ஸ்டாலின் குடும்ப கம்பெனியின் நாடகம் முடிந்துவிட்டது. மாம்பழத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போராட்டம் நடத்த அறிவித்துள்ளார். விவசாயிகளின் பாதுகாவலர் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று பேசினார்.