கிருஷ்ணகிரி, செப். 02 –
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பட்டி கிராமம், அரசம்பட்டி ஜே.கே. 365 தென்னை ஆராய்ச்சி மையத்தில் உலக தேங்காய் தினத்தையொட்டி அரசம்பட்டி ஜே.கே. 365 தென்னை ஆராய்ச்சி பண்ணை, ஆற்காடு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய வானொலி நிலையம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பாலாறு வேளாண்மை கல்லூரி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், ஈஷா காவேரி கூக்குறள் மற்றும் அரசம்பட்டி உதவும் கரங்கள் இணைந்து நடத்திய உலக தேங்காய் தின திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் துவக்கி வைத்து உரையாற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ம் நாளை உலக தென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று தென்னை தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், மூலிகைச் செடிகள், இயற்கை வேளாண்மை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி விவசாய பெருமக்கள், பொதுமக்கள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். தென்னை என்றால் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் இருக்கும் நிலையில் அரசம்பட்டி தென்னை தமிழ்நாட்டில் மிக அதிகம் தேவையான பொருளாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னை நாற்றுகள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாய பெருமக்கள் விரும்பி வாங்கி சென்று நடவு செய்கிறார்கள்.
உலகிற்கே பரைசாற்றும் பணியாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. விவசாய பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்தோடு கைகோர்த்து செயல்பட்டால் இதற்கு உண்டான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கலாம். தென்னை மற்றும் தென்னை பொருட்கள் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து உலகலாவிய பிராண்டாக கொண்டுசெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல பனை மரம் என்றால் திருநெல்வேலி, இராமநாதபுரம் என்று இருக்கும் நிலையில் நமது மாவட்டத்திலுள்ள மத்தூரில் அதிக பனை மரம் உள்ளது. தற்போது வருடத்திற்கு 6 இலட்சம் பனை விதை வைத்து பனை மரங்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 3.4 இலட்சம் பனை விதைகள் இருப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பனை பொருட்கள் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். தற்போது ஓசூரில் உள்ள பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புநிதியின் கீழ், ஒரு வருடத்திற்கு 12 இலட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நர்சரி அமைக்கும் பணிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிலம் சமன் மற்றும் பெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உலக தென்னை நாள் விழாவில் தென்னைக்குள் பல அடுக்கு விவசாயம், தென்னையும் நமக்கு ஒரு அன்னையே உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக தேங்காய் தினத்தையொட்டி அமைக்கப்பட்ட தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், மூலிகைச் செடிகள், இயற்கை வேளாண்மை கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால், பையூர் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் அனிசா ராணி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா, செயின் பீட்டர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அதியமான் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய செயலாளர் டாக்டர் இலாசியா தம்பிதுரை, அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தென்னை உற்பத்தி ஆராய்ச்சியாளர் ஜே. கென்னடி, முன்னாள் வேளாண் இணை இயக்குநர் பச்சையப்பன், வட்டாட்சியர் சத்யா மற்றும் தென்னை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



