ஈரோடு, ஆக. 27 –
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மண்டல இளைஞர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் மாநில தலைவர் விக்ரம ராஜா சிங் கலந்து கொண்டு பேசினார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களினால் சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகிறது. இந்த கம்பெனிகள் தொடங்கப்படும் போது மொத்த வியாபாரம் மட்டும் நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதை மீறி இப்போது சில்லரை வியாபாரத்தில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை கண்டித்து வருகிற 30-ம் தேதி திருச்சியில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலை நீடித்தால் கார்ப்பரேட் கம்பெனிகளை அப்புறப்படுத்தப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்துவதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளில் சோதனை நடத்துவதை அவர்கள் தவிர்க்கிறார்கள். ஆனால் சிறு வணிகர்களிடம் சோதனை நடத்தி பொருட்களை பறிமுதல் செய்வதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் சோதனை நடத்துவதில்லை என்பது தெரியவில்லை.
போதைப் பொருள் நடமாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப் பொருளை விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் கண்டிப்பாக தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு மொழியை கற்று கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக இந்தி மொழியை திணிப்பு தான் தவறு என்று கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் சண்முக வேல், செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



