புதுக்கடை, ஆக. 3 –
தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் காப்புக்காடு தொல்காப்பியர் சிலை வளாகத்தில் வைத்து தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். பணி நிறை தலைமை ஆசிரியர் ஸ்ரீ. பாபு கருத்துரை வழங்கினார். தொல்காப்பியம், தொல்காப்பியர் இவற்றைக் குறித்த அறிதல் பள்ளி மாணவ, மாணவியருக்கு கிடைக்க மாதம் தோறும் நடைபெற்று வரும் பேச்சுக் கலை வளர்ப்பில் நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீ மிருதுளா தொல்காப்பியத்தின் பெருமை என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவருக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து காப்புக்காடு ஸ்ரீ விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஷோபா தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சிந்து குமார், எழுத்தாளர் அரிகிருஷ்ண தாஸ், தூத்துக்குடி துறைமுகக் கழக பைலட் பென்னட் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் திருவேங்கடம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மோகனகுமார், வின்சென்ட், சுரேஷ், கோவிந்தராஜ், பேபி, ஷஞ்சய் ஷாலஜி, முருகன், மாஸ்தரன் சிங் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். அறக்கட்டளை பொருளாளர் ரெவிந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.