மார்த்தாண்டம், ஜூலை 18 –
குமரி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் குழித்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் நீதிமன்ற கட்டடத்தில் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. பல மாடிகளை கொண்ட கட்டடத்தில் இதுவரை லிப்ட் வசதி ஏற்படுத்தப்படவில்லை. லிஃப்ட் அமைக்க இடம் விட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் இதுவரை லிப்ட் அமைக்கப்படவில்லை என்பதே மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இதனால் நீதிமன்ற வழக்குகளுக்காக வரும் மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். லிஃப்ட் அமைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தை சாக்கடை உற்பத்தி மையமாக மாற்றி சுகாதார கேட்டின் உறைவிடமாக பொதுப்பணித்துறை மாற்றி வருகிறது. இது தொடர்பாக குழித்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறைகளில் இருந்து வரும் கழிவுநீர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பாய்ந்து மாநில நெடுஞ்சாலை வழியே சாலையில் ஆறாக பாய்ந்து வருகிறது. அருகில் உள்ள தாலுகா அலுவலகத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் வழியே கழிவுநீர் பாய்ந்து ஓடுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நீதிமன்ற வளாகம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தை குழித்துறை நகராட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதனால் நீதிமன்ற வளாகம் கழிப்பறை கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி சுகாதார கேடு உற்பத்தி மையமாக மாறி உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சுகாதார கேடு ஏற்பட்டு உயிர்பலி ஆகும் முன்னர் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.