களியக்காவிளை, ஆக. 4 –
களியக்காவிளை அருகே குளப்புரம் பகுதியை சேர்ந்தவர் சிமியோன். குழித்துறை ரயில் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெளியூரில் உள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிமியோன் வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 15,000 திருட்டு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் நோட்டம் விட்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகை பணத்தை திருடி சென்றிருக்கின்றனர்.
இது குறித்து களியக்காவிளை போலீசில் சிமியோன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை கைப்பற்றினார்கள். மேலும் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு உடனடியாக துப்பு துலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.