மார்த்தாண்டம், ஜூலை 18 –
நாகர்கோவிலில் இருந்து கோட்டயத்துக்கு பயணிகள் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது புதுக்கடை அருகே ராமன்துறையை சார்ந்த ஜாக்சன் (31) என்பவர் குழித்துறை ரயில் நிலையத்தில் இருந்து ஏறி உள்ளார். அப்போது ரயில் ஏறிய கோட்டயத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவரிடம் செயினை பறிக்க ஜாக்சன் முயன்று உள்ளார். பின்னர் பாலராமபுரம் ரயில் சுரங்கப்பாதை அருகில் ரயில் வேகம் குறைக்கும் நேரம், ரயில் இருந்து குதித்து தப்பி செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் செயின் ஜாக்சனின் கையில் கிடைக்கவில்லை. அவர் ரயில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் நின்றவர்கள் அவரை மீட்டு பாலராமபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இந்த தகவல் அறிந்த பாலராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காதல் தோல்வி காரணமாக ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதாக ஜாக்சன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு இடையே திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறங்கிய நர்ஸ் தனக்கு நேர்ந்த செயின் பறிப்பு முயற்சி தொடர்பாகவும் ரயிலில் இருந்து செயின் பறிக்க வந்த நபர் குதித்து தப்பி ஓடி தொடர்பாகவும் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதை தொடர்ந்து ரயில்வே போலீசார் பாலராமபுரம் போலீசிடம் விவரங்களை தெரிவித்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது ஜாக்சன் என்று உறுதியானது. பின்னர் பாறசாலை ரயில்வே போலீசார் ஜாக்சனை கைது செய்தனர்.