நாகர்கோவில், அக். 2 –
நவராத்திரி விழாவின் பத்தாம் நாளை விஜயதசமி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தொடங்கும் எந்த நல்ல காரியமும் வெற்றியை கொடுக்கும் என்பது ஐதீகம். இதனால் விஜயதசமி நாளில் பல அலுவலகங்களில் புதிய கணக்குகளை தொடங்குவார்கள். அதே போல் குழந்தைகளுக்கு முதல் கல்வியும் ஆரம்பிப்பார்கள்.
இந்த நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் அறிவு கூர்மையுடன் இருந்து, வெற்றி வாகை சூடுவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் விஜயதசமி நாளில் பாரம்பரிய முறைப்படி பெரிய தாம்பாள தட்டில் அரிசி அல்லது நெல்மணிகளை பரப்பி அதில் தாய் மொழியில் முதல் எழுத்து எழுத வைப்பது வழக்கம். இதை வித்தியாரம்பம் என்று அழைக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. குமரியில் பிரசித்தி பெற்ற மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில், திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோவில், பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் மழலைகளுக்கு இன்று முதல் கல்வியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதில் ஆ, ஆ எழுத்தை எழுதித் தொடக்கி வைத்தனர். மேலும் தங்க ஊசியால் குழந்தைகளின் நாக்கில் ஓம் என்று எழுதியும் திருஏடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இது போன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடந்த இந்த வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



