சுசீந்திரம், அக். 9 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், சக்தி முருகன், பிரவீன் ரகு, ரவி, ஜெஃப்ரி மோள் ஆகியோர் அடங்கிய குழுவினரால் சுங்கான்கடை, பெரும்செல்வவிளை, வெள்ளியாவிளை, பாலப்பள்ளம், சகாயநகர், இலவுவிளை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து திடீர் சோதனை நடத்தினர்.
53 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்பட்டது. இதில் கணேஷ் – 18.625 கிலோ, கூலிப் – 13 கிலோ மற்றும் மெல்லும் புகையிலை – 102கிலோ *மொத்தம் – 134.237 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாக கடைகள் மூடப்பட்டது. மொத்த அபராதம் ரூ 1,50,000 விதிக்கப்பட்டது.
இதுபோல் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் முதல் முறை Rs 25000 அபராதம் மற்றும் 15 நாள் கடை மூடப்படும். இரண்டாவது முறை என்றால் ரூ. 50000 அபராதமும் ஒரு மாதம் கடை மூடப்படும். மூன்றாம் முறை கண்டறியபட்டால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு மூன்று மாதம் கடை மூடப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.



