கன்னியாகுமரி, மே 18 –
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.
இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு கடலில் உல்லாச பயணம் செய்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீன சொகுசு படகுகளும் உள்ளன. இந்த 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கடலில் நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும் போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
இதைத்தொடர்ந்து படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் தூர்வாரும் பணி கடந்த 2 தொடங்கி நடைபெற்றது. மணல் குவியல்களை ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று பின்னர் நிறைவடைந்தது.


