நாகர்கோவில், செப். 23 –
நாகர்கோவில், கோணம், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கலந்துகொண்டு கட்டுமான தொழிலாளர்களிடையே கூறியதாவது: இந்த முகாமில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று முதல் வழங்கப்பட உள்ளது.
அதன்படி கொத்தனார், சித்தாள், தச்சு வேலை, வர்ணம் பூசுதல், கம்பி வளைப்பவர். பிளம்பர், மின்பணி வேலை, சலவைக்கல் ஒட்டுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல் உள்ளிட்ட 11 தொழில் பிரிவுகளின் கீழ், பயிற்சியில் பங்குபெறும் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதிய இழப்பீட்டுத்தொகையாக ரூ.800/- உடன் கூடிய 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில் வயது 18 வயது முதல் 60 வரை உள்ளவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். 11 தொழில் இனங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மஸ்தூர் தொழில் இனத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மீதமுள்ள 11 தொழில் இனங்களில் ஏதாவது ஒன்றில் பயிற்சி பெற பெறலாம்.
வரும் 28.09.2025 அன்று வரை 7 நாட்கள் தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழும் வழங்கப்படும். எனவே, இம்மாவட்டத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களும் இந்த பயிற்சியில் பங்கு பெற்று பயனடையலாம். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி வழங்கப்படும். மேற்படி பயிற்சியானது எல் அன்ட் டி நிறுவனத்தின் மூலம் நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களாகிய நீங்கள் உங்கள் தொழிலில் மேலும் வளர்ச்சியடைய இப்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.
இப்பயிற்சியில் முமுமையாக கலந்து கொண்டு உங்கள் திறன்களை வளர்க்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கோணம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் பிலிப் ஆல்வின், தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் ராஜா குமார், உதவி இயக்குநர் திறன்பயிற்சி லெட்சுமிகாந்தன், கூட்டத்தில் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



