நாகர்கோவில், செப்டம்பர் 6 –
பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காலநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்களிடம் இருந்து தொடங்கும் பொது விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் எஸ்டிஜி-13 மற்றும் மிஷின் லைப் இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட உள்ளது. இது மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் நெறியில் பயணிக்க ஒரு சிறந்த வழியாக அமையும். ஒவ்வொரு மாணவனும், மாணவியும் பசுமையை பேணும் ஒரு செயலில் நேரடியாக பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்று நட்டிட வேண்டும். பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழலில் மரக்கன்றுடன் தாயார் அல்லது பாதுகாவலருடன் எடுத்த புகைப்படம் தயாரிக்க வேண்டும். அந்த புகைப்படம் இணையதளத்தில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் பதிவேற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை இயக்க குழு பொறுப்பாசிரியர், மாணவர் தூதர்கள் மற்றும் குழு மாணவர் தலைவர்கள் திட்டமிட்டு இந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும்.
மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் அடிப்படையில் போட்டி தன்மை உருவாக்கி ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் பங்கேற்புக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் எல்லைகளுக்குள் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கூட்டம் நடத்தி மரக்கன்று நடுதல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். இந்த நிகழ்வு ஒரே நாளில் ஒவ்வொரு வட்டத்திலும் செப்டம்பர் 10-ம் தேதிக்குள் ஏற்ற நாளில் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


