மார்த்தாண்டம், ஆக. 16 –
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் காங்கிரஸ் மருத்துவ அணி சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை துவங்கி வைத்து மரக்கன்றை நடவு செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய சுதந்திரம் அடைய தேச தந்தை காந்தியடிகள் தலைமையில் ஏராளமான தியாகிகள் இன்னுயிரை மாய்த்து தான் சுதந்திரம் பெற்றனர். ஆர்எஸ்எஸ் கும் சுதந்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆர்எஸ்எஸ் எந்த இடத்திலும் சுதந்திரத்திற்கு கொடி பிடித்தது கிடையாது. ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவிலையோ வீர மரணம் அடைந்த யாராவது உண்டா, காட்டி கொடுத்தவர்கள் இடத்தில் அவர்கள் இருக்கின்றனர்.
அவர்களுக்கு இந்திய சுதந்திரம் குறித்து எந்த அக்கறையும் இல்லை.
நாட்டில் எவ்வளவோ பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. சுதந்திர தின உரையில் இந்தியாவைப் பற்றி பேசலாம். இந்தியாவில் இருக்கும் மக்களை பற்றி பேசலாம்.
மக்களின் முன்னேற்றத்தைக் குறித்து பேசலாம். ஆர்எஸ்எஸ் அமைப்புதான் பாஜகவை இயக்குவதால் மோடி அப்படி பேசி இருக்கிறார். பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் துறைகளை வைத்து பூச்சாண்டி காமித்து வருகின்றன. இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்கு வங்கியை பெறுவதற்கு இது போன்ற ஏவல் துறையை வைத்து சோதனையை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு வாக்குகளை திருடி வெற்றி பெற்று இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தீபாவளி பரிசையும் தேர்தலை முன்னிறுத்தி தான் அவர் பேசியிருக்கிறார். ஜிஎஸ்டிஎல் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என கூறினார். இந்த பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



