ராமநாதபுரம், ஜுலை 22 –
பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக கேட்டு அறியும் வகையில் பணிகள் துவங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்கள். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்புற மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது நடத்தப்படும் என அறிவித்திருந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஜூலை 15-ம் தேதி அன்று கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது. கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளில் சேவைகள் திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், ஏழு பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. முகாம்கள் நடைபெறும் பகுதிகள் தொடர்பான அட்டவணை தெரிவிக்கப்பட்டு அதன்படி நடைபெற்று வருகின்ற முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி வருகின்றார்கள். நகர்ப்புற பகுதிகளில் 15 அரசு துறைகளின் சார்பில் 46 சேவைகளும் ஊரகப் பகுதிகளில் 13 அரசு துறைகளில் சார்பில் 43 சேவைகளும் வழங்கப்படும். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணும் வகையில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று கோரிக்கை மனு வழங்கிய பயனாளி தேவகி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவிக்கையில்: என்னுடைய பெயர் தேவகி. நான் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பள்ளபச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் விவசாய வேலை செய்து வருகின்றேன். எனக்கு அரசு வழங்கும் திட்டங்களை பெற வேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணி வந்தேன். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எனக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லாததால் நான் அரசு அலுவலகங்களுக்கு நாடி செல்ல முடியாமல் தவித்து வந்தேன். இந்த நேரத்தில் தான் எங்களது கிராமத்தில் வீடு வீடாக வந்து விண்ணப்பங்களை தன்னார்வலர்கள் வழங்கி வருவதை அறிந்து அவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு அறியும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து அதன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள்.
எனவே தங்களுடைய கோரிக்கைகளை தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பத்தினை வழங்கிப் பயன்பெறுங்கள் என தன்னார்வலர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். மேலும் எங்கள் பகுதியில் எந்த இடத்தில் முகாம் நடைபெறும் என்பது பற்றியும் நான் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் தொடர்பாகவும் எனக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்கள். நான் தற்போது இன்று நடைபெற்ற முகாமில் தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்துள்ளேன். மனுவினை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் என் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள். இதன் மூலம் எனக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. கடைக்கோடி மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் கிடைத்திடும் மகிழ்ச்சி திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.