ஈரோடு, ஜூன் 26 –
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் டெலிபோன் பவன் எதிரே நியோ பிரைம் என்ற பெயரில் புதிய மருத்துவமனை மற்றும் நியோ கிட்னி டயாலிசிஸ் மையம் அமைந்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் முகமது தாவூத் அப்ரார் தலைமை தாங்கினார். சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர்கள் ஹரீஷ் சிவஞானம் மற்றும் டாக்டர்கள் ரேஷ்மா, வினித் ஹரீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஈரோடு கே.இ. பிரகாஷ் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வி.சி சந்திர குமார் எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நியோ கிட்னி ப்ளஷ் பிரிவை நெல்லை மருத்துவக்கல்லூரி நெப்ராலஜி துறை தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதில் டாக்டர்கள் உசேன் அலி, ரபியா பானு, சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் பொது ஆலோசனை நிபுணர் மற்றும் நீரழிவு நோய் நிபுணர் டாக்டருமான முகமது தாவூத் அப்ரார் கூறும்போது, ‘இங்கு டயாலிசிஸ், சிறுநீரக சிகிச்சை, குழந்தை மருத்துவம் மற்றும் சிறுநீரக பராமரிப்பு உள்பட அனைத்து பிரிவு நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன’ என்று கூறினார்.