ஈரோடு, ஆக. 26 –
நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு நாடார் மேடு ரீட்டா தொடக்கப் பள்ளியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சியில் 59 பள்ளிகளில் பயிலும் 6,786 மாணவ, மாணவியர்கள், நகராட்சிகளில் 23 பள்ளிகளில் பயிலும் 1,362 மாணவ, மாணவியர்கள், ஊரகப்பகுதிகளில் 1,033 பள்ளிகளில் பயிலும் 40,845 மாணவ, மாணவியர்கள் பயன் பெற்று வந்தனர். தற்போது ஈரோடு மாநகராட்சியில் 15 பள்ளிகளில் பயிலும் 3,168 மாணவ, மாணவியர்கள், நகராட்சிகளில் 12 பள்ளிகளில் பயிலும் 2,280 மாணவ, மாணவியர்கள், ஊரகப் பகுதிகளில் 27 பள்ளிகளில் பயிலும் 1,501 மாணவ, மாணவியர்கள் என 54 பள்ளிகளில் பயிலும் 6,949 மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சியில் 74 பள்ளிகளில் பயிலும் 9,954 மாணவ, மாணவியர்கள், நகராட்சிகளில் 35 பள்ளிகளில் பயிலும் 3,642 மாணவ, மாணவியர்கள், ஊரகப் பகுதிகளில் 1,060 பள்ளிகளில் பயிலும் 42,346 மாணவ, மாணவியர்கள் என மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் 1,169 பள்ளிகளில் பயிலும் 55,942 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் துணை மேயர் செல்வராஜ், மண்டல குழுத் தலைவர்கள் பி.கே. பழனிசாமி சசிகுமார், குறிஞ்சி என். தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



