ஈரோடு, ஜூலை 25 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தக வாசிப்பை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஊக்குவிக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்து நடத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, ஈரோடு புத்தகத் திருவிழா வருகிற 1 ந் தேதி முதல் 12 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடக்கும் இப்புத்தக கண்காட்சியில் சுமார் 230 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் புகழ்மிக்க பதிப்பாளர்கள் வருகை தந்து அரங்குகளை அமைக்க உள்ளார்கள். இப்புத்தகத் திருவிழா காலை 11.00 மணி முதல் இரவு வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள், அறிஞர்கள் கருத்துரை வழங்க உள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் புத்தக கண்காட்சி அரங்குகள் மற்றும் சொற்பொழிவு அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதையும், இருக்கை வசதிகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுவதற்கான இட வசதி மற்றும் புத்தக கண்காட்சிக்கு வருகை தரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் துணை ஆணையர் தனலட்சுமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஈரோடு வட்டாட்சியர் முத்து கிருஷ்ணன் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட துறை பலர் கலந்து கொண்டனர்.