ஈரோடு, ஆக. 11 –
ஈரோடு ரங்கம் பாளையத்தில் உள்ள டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா முதலியார் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. செயலாளர் மற்றும் தாளாளர் கே.கே. பாலுசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் பழனியப்பன் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 345 இளங்கலை மற்றும் 58 முதுகலை மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவர்கள் பொறுமையும், மரியாதையும் கொண்டவர்களாக என்றும் நல்ல பண்புடன் திகழ்வதோடு எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் அளவுக்கு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மாணவர் படித்தால் அந்த குடும்பமே முன்னேறும்.
இதற்கு உதாரணம் பொருளாதார வசதி இன்றி குடிசையில் வசித்து வந்த ஒரு மாணவி நன்கு படித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு நல்ல வேலையை பெற்றார். இதன் காரணமாக அவரது பொருளாதாரத்தில் வளர்ந்து இப்போது அமெரிக்காவில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது தாயாரையும் அங்கு அழைத்து சென்று தன்னுடன் வைத்துக் கொண்டார். இதேபோல் நீங்களும் நன்றாக படித்து நல்ல வேலையில் அமரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வி.சி. சந்திரகுமார் எம் எல் ஏ, முதலியார் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் டாக்டர் மாணிக்கம், ராமச்சந்திரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



