தென்காசி, செப். 15 –
பணம் கொடுத்தால்தான் பட்டா வழங்க முடியும் என அதிகாரிகள் கூறிவரும் நிலையில் 35 ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகள் ஆளுமையிடம் கோரிக்கை வைத்து விண்ணப்பித்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாக கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வேதனை தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கடையநல்லூர் நகரம் இரண்டாவது வார்டு கற்பகசுந்தர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் லட்சுமண வேளாளர். மண்பாண்ட தொழில் செய்து வரும் இவர் செங்கல் சூளையில் சாந்து குழைக்கும் கூலி தொழிலாளியாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குடியிருக்க வீடு கூட இல்லாமல் அரசு நத்தம் புறம்போக்கில் ஒரு சிறிய அளவில் மனைவி மகள்களோடு குடியிருக்க மண்ணாலான சுவர்களை கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் அரசை ஆளுமை செய்கின்ற போது அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சி தொண்டர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொண்டர்களுக்கு விசுவாசமாய் நடந்து கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் இந்த இரு திராவிட கட்சிகளோடு கூட்டணியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சியான நான் அங்கம் வகிக்கும் கட்சியும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்காக தோள் கொடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வெற்றியும் கண்டுள்ளது. அந்த நிலையில் ஒரு போராளியாக நான் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளாலும் தென்காசி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளாலும் ஒரு போராளியாக கட்டமைக்கப்பட்டு இவரிடம் எந்த லஞ்சமும் வாங்க முடியாது என்கின்ற ஒரே காரணத்திற்காக தான் வசிக்கும் குடியிருப்பு அருகே உள்ள மற்ற குடியிருப்புகளுக்கெல்லாம் பட்டா வழங்கிய வருவாய் துறை நிர்வாகம் இவர் வீட்டிற்கு மட்டும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க இயலாது என கை விரித்து விட்டனர்.
இவரும் விடாமுயற்சியாக கடந்த 35 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் வாராந்திர மனுநீதி நாள் முகாம் வருவாய்த்துறை அமைச்சர் தமிழக முதல்வர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு அரசுத்துறை செயலர் என அனைவருக்கும் தனது கோரிக்கையையும் நடந்த சம்பவ நிகழ்வுகளையும் தொகுத்து மனுவாக விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனால் எந்த விண்ணப்பங்களுக்கும் பசியாக அதிகாரிகள் இவரை எங்கு சென்றாலும் பட்டா வேண்டும் என்றால் பணம் கொடு என்று வருவாய் துறை அதிகாரிகள் சொல்லி வருவார்களாம். இது குறித்து அவரும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் துறை நிர்வாக அதிகாரிகள் மீதும் கிராம நிர்வாக அதிகாரிகள் மீதும் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் உயர் அதிகாரிகளும் ஒரு சாமானியனின் கோரிக்கையை செவிமடுப்பதே இல்லையாம்.
இந்த நிலையில் தான் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைக்கின்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசில் உங்களுடன் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் பல்வேறு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு வர சலுகைகளை வழங்கி வருவதாக அரசு வட்டாரங்கள் தரித்து வரும் நிலையில் இவரும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சீதாலட்சுமி கல்யாண மண்டபத்தில் கடந்த 12-08-2025-ந்
தேதி நடந்த முகாமில் தான் குடியிருக்கும் கதவிலக்கம் 158 என்ற வீட்டிற்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் வழக்கம் போல் அதிகாரிகள் கடந்த 35 ஆண்டுகளாக இவருடைய விஷயத்தில் என்ன கேலிக்கூத்தை அரங்கேற்றினார்களோ அதையே இந்த முறையும் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமிலும் நடத்தியுள்ளனர்.
விண்ணப்பித்து ஒரு மாத காலம் கழிந்த நிலையிலும் இன்னும் அவர் விண்ணப்பம் குறித்து கிராம நிர்வாக அதிகாரியும் வருவாய் ஆய்வாளரோ வட்டாட்சியரோ விசாரணை செய்யக்கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சாமானியனின் குரலுக்கு இந்த அரசு செவிமடுக்காது என்பதற்கு இவரின் கோரிக்கை மனு விஷயம் ஒரு உதாரணம்.
இது குறித்து லட்சுமண வேளார் கூறியதாவது: ஆளும் திமுகவை பொருத்தவரையில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகள் செய்வதற்கு தேவைப்படுவர். ஆனால் பின் நாட்களில் அந்த கூட்டணி கட்சியினரின் நியாயமான கோரிக்கைகளுக்குகூட இந்த அரசு செவி சாய்க்காது என்பது பல்வேறு விஷயங்களில் நாட்டு மக்கள் அறிந்து கொண்டு தான் வருகின்றனர். அந்த வகையில் ஒரு சாமானியன் போராளி என்ற ஒரே காரணத்திற்காக அதிகாரிகளால் கட்டம் கட்டப்பட்டு இன்றுவரை எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது கடும் வேதனையை அளிக்கிறது. கூட்டணி கூடினாலும் பரவாயில்லை. வரும் தேர்தலில் என்னை போன்ற சாமானியின் சக்திகளை வெளிப்படுத்துவோம் என்றார்.



