புதுக்கடை, ஜூலை 22 –
தேங்காப்பட்டணம் அருகே இனயம் நடுத்தெரு 16ம் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (69) மீனவர். இவர் மிகவும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அதே பகுதியில் உள்ள அவரது மகள் பேபி ஷாலினி என்பவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் அவரது மகள் பேபி ஷாலினி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரம் வீட்டில் தனியாக இருந்த அந்தோணி பிள்ளை அவர் தங்கி இருந்த வீட்டின் வராண்டாவில் இருந்த மின்விசிறியின் கொக்கியில் தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகள், உறவினர்கள் உதவியுடன் அவசரமாக அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்தோணி பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து அந்தோணி பிள்ளையின் மகன் சேசுபாலன் (47) என்பவர் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.