விளாத்திகுளம், செப்டம்பர் 1 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், தாப்பாத்தி, மேலக்கரந்தை, நம்பியாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 53 விநாயகர் சிலைகள் வாகனத்தில் எடுத்துவரப்பட்டு விளாத்திகுளம் இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பாக இந்துக்களின் எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது. வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 53 விநாயகர் சிலை வாகனத்தை பூஜை செய்த பின் அகில இந்திய பாரதத் துறவியர் சங்க மாநில இணைச்செயலாளர் ஸ்ரீ ல, ஸ்ரீ ராகவானந்த சுவாமி மற்றும் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் விளாத்திகுளத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற 53 விநாயகர் சிலைகள் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் மன்னார் வளைகுடா வேம்பார் கடலில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், பாஜக 8-வது வார்டு உறுப்பினர் ராமலட்சுமி ராமகாளியப்பன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



