கோவை, அக்டோபர் 06 –
இந்திய ரேசிங் லீக் , எஃப் .ஐ .ஏ சான்றளிக்கப்பட்ட ஃபார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா எல்.ஜி.பி 4 பந்தயங்களைக் கொண்ட 28வது ஜே.கே.டயர் தேசிய பந்தய சாம்பியன்ஷிப்பின் 2வது சுற்று இண்டியன் ரேசிங் ஃபெஸ்டிவல் கோவை கரி மோட்டார் ஸ்பீட் வேயில் நடைபெற்றது. இதில் கிச்சாவின் கிங்ஸ் பெங்களூருவின் கைல் குமரன் முதலாமிடத்தையும், ஹைதராபாத் பிளாக் பேர்ட்ஸ் -ன் அகில் ரவீந்திரா 2 ஆம் இடத்தையும், கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு அணியின் மற்றொரு வீரர் நீல் ஜானி 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.
மற்றொரு பிரிவான ஃபார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பில் அகமதாபாத் அபெக்ஸ் ரேசர்ஸ் அணி சார்பாக ஜப்பானை சேர்ந்த இட்சுகி சாடோ முதலிடமும், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் காசி மோட்லேகர் 2ஆம் இடமும், ஸ்பீட் டெமான்ஸ் டெல்லி அணியின் சைஷிவ சங்கரன் 3 ஆம் இடமும் பிடித்தனர். 28 வது ஜே.கே டயர் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஃபார்முலா எல்.ஜி.பி – 4 பந்தயங்களில், டார்க் டான் ரேசிங்கின் மெஹுல் முதலிடத்தை பெற்றார். எம் ஸ்போர்ட்ஸின் துருவ் கோஸ்வாமி 2வது இடமும், டார்க் டான் ரேசிங் அணியின் ஆதித்யா பட்நாயக் 3வது இடமும் பெற்றனர்.
மேலும் இதே பிரிவில் நடந்த 2 வது பந்தயத்தில் டார்க் டான் ரேசிங்கின் மெஹுல் அகர்வால் முதலிடமும், எம் ஸ்போர்ட்ஸின் துருவ் கோஸ்வாமி 2வது இடமும், டார்க் டான் ரேசிங்கின் மற்றொரு வீரர் தில்ஜித் டி.எஸ் 3ஆம் இடமும் பிடித்தனர். இதுகுறித்து
ரேசிங் ப்ரோமோஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அகிலேஷ் ரெட்டி கூறியதாவது: இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4க்கான வரவேற்பு எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது. மேலும் நாங்கள் கண்ட உற்சாகம், குறிப்பாக பந்தயச் சாலைகளை சுற்றி மோட்டார் ஸ்போர்ட் இந்தியாவில் புதிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
மேலும் இந்த விளையாட்டை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அடுத்த தலைமுறையினர் மோட்டார் ஸ்போர்ட்ஸை காண ஊக்குவிப்பதற்கும் இந்நிகழ்வு அமையும். 3வது சுற்று தொடரும் வேளையில் இப்போது கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறும் 2வது நாளுக்கு கவனம் திரும்புகிறது. இந்திய ரேசிங் லீக், ஃபார்முலா -4 மற்றும் ஜே.கே. டயர் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் முழுவதும் கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுவதால் கோயம்புத்தூரில் நடைபெறும் 2 ஆம் நாளில் அதிக-ஆக்டேன் ஆக்ஷன் மற்றும் வியப்பூட்டும் முடிவுகளை ரசிகர்கள் எதிர் நோக்கலாம் என்றார்.



