மதுரை, நவ.06:
குதிரை பேரம் தொடர்பான புகாரில் அதிமுக முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீஸார், அவரைச் சந்திக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார்
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா, குதிரை பேரம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னனை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிகாலையில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து தகவலறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் குவிந்தனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை உள்ளிட்டோர் அங்கு வந்து பி.எம். மன்னனைச் சந்திக்க அனுமதி கேட்டனர்.
போலீஸாரிடம் ஆவேசமாக வாக்குவாதம்
ஆனால், விசாரணை நடைபெறுவதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு போலீஸார் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் அனுமதி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய செல்லூர் ராஜு, “நானும் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளேன். கட்சி நிர்வாகி என்ற முறையில் மன்னனைச் சந்திக்க வந்துள்ளேன். என்னை அனுமதிக்காமல் வெளியில் அமர வைக்கிறீர்கள். ஆட்சி மாறியதால் காவல்துறையும் மாறிவிட்டதா? இது என்ன அராஜகம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
பின்னர் சந்திக்க அனுமதி
செல்லூர் ராஜுவின் எதிர்ப்புக்குப் பின்னரும் போலீஸார் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து மன்னனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர். பின்னர் செல்லூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் பி.எம். மன்னனைச் சந்திக்க போலீஸார் அனுமதி வழங்கினர். இந்தச் சம்பவத்தால் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



