மதுரை, ஜூலை 17 –
மதுரை ஆவின் அலுவல வளாகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் எஸ். சுப்பிரமணி: “தனியார் நிறுவனங்கள் வழங்கும் விலைக்கு நிகராக அரசு கொள்முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த உயர்வு இல்லையெனில் ஆவினுக்கு பால் வரத்து மேலும் குறைந்து, நுகர்வோருக்கு தேவையான அளவில் பால் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
ஆவின் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை முதற்கட்டமாக ஊட்டி மற்றும் கொடைக்கானலில் அறிமுகப்படுத்தியிருப்பது அந்த பகுதிகளின் சூழ்நிலைக்கு ஏற்றதாகும். ஆனால் நகர்ப்புறங்களில் இதே முறையை செயல்படுத்துவது சாத்தியமில்லை. இன்றைய சூழலில் மக்கள் வீட்டிலிருந்தபடியே தேவையான பொருட்களை ஆர்டர் செய்து பெறும் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். பாத்திரம் எடுத்துக்கொண்டு தானியங்கி இயந்திரங்களுக்கு சென்று பால் வாங்கும் நடைமுறை நகர்ப்புறங்களில் பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவே ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க வீடு தோறும் பாக்கெட் பால் விநியோகத்தையே அரசு வலுப்படுத்த வேண்டும்.
தற்போது அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 என்றாலும், கொழுப்பு மற்றும் இதர சத்துக்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நடைமுறையில் ரூ.32.50 முதல் ரூ.33 வரை மட்டுமே கிடைக்கிறது. அதனுடன் அரசின் ரூ.3 ஊக்கத்தொகை சேர்த்தாலும் ரூ.35.50 மட்டுமே கிடைக்கிறது. மறுபுறம், தனியார் நிறுவனங்கள் குறைந்த கொழுப்பு சத்துள்ள பாலுக்கும் லிட்டருக்கு ரூ.42 முதல் ரூ.44 வரை வழங்குகின்றன. இதனால் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை விட தனியார் நிறுவனங்களையே நாடுகின்றனர். இதுவே ஆவினில் பால் கொள்முதல் தொடர்ந்து குறைவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. அரசு தரமான பாலை மட்டுமே கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு தரமான பாலை வழங்கி வருகிறது. ஆனால் பால் உற்பத்தியாளர்களுக்கும் போட்டித்திறன் மிக்க விலை வழங்கப்பட வேண்டியது அவசியம்.
எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர், ஆவின் ஆணையர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். நலச்சங்க செயற்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். இந்த கோரிக்கையை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
தற்போது தினந்தோறும் ஆவினுக்கு வரும் பால் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். எனவே பால் கொள்முதல் விலையை உடனடியாக ரூ.45 ஆக உயர்த்தி உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் எஸ். சுப்பிரமணி தெரிவித்தார்.



