நாகர்கோவில், செப். 08 –
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருந்தகோடு பகுதியில் வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 75 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் ஆலயம் எழுப்பப்பட்டு மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி சுற்று வட்டார ஆறு ஊர்களை இணைக்கும் வகையில் முக்கலம்பாடு பங்கு பேரவை என இந்த வியாகுல அன்னை ஆலயம் பெயரும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஊரின் பெயரை மாற்றும் நோக்கில் நீதிமன்றத்தில் முறையிட்டு செக்காரவிளை என மாற்ற கேட்டு வழக்கு நடந்து வந்தது.
இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு செக்காரவிளை முக்கலம்பாடு பங்கு என இந்த திருவிழா முதல் அழைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் இருந்து உத்தரவு பெறப்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊர் பங்கு முக்கலம்பாடு என்று அழைக்க வேண்டும், செக்காரவிளை என்று அழைக்கக்கூடாது என ஒரு தரப்பினரும் செக்காரவிளை, முக்கலம்பாடு என அழைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு வியாகுல அன்னை ஆலய திருவிழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருப்பதால் திருவிழா நோட்டீஸ் அடிக்கப்பட்டுள்ளது. இதில் செக்காரவிளை பங்கு நிர்வாகம் என அச்சு அடிக்கப்பட்டதால் இதற்கு எதிராக முக்குலம்பாடு பங்கு குடும்ப விழா எனவும் மற்றொரு தரப்பினர் அடித்துள்ளனர். இதனால் இருதரப்பினரையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது பங்கு நிர்வாகத்திற்கு இடையே பங்கு மக்களை பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பங்கு தந்தை பீட்டர் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி முக்கலம்பாடு பங்கு நிர்வாக ஆதரவு மக்கள் பங்கு தந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டதால பரபரப்பு ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் முக்கலம்பாடு என 75 ஆண்டுகளாக இருந்து வருகிற பெயரை செக்காரவிளை என மாற்றக்கூடாது. மேலும் பங்கு தந்தை பீட்டர் தங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகிறார். இவரை மாற்ற கேட்டு ஆயரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தங்கள் பங்கு நிர்வாக பெயர் ஆண்டாண்டுகளாக பயன்படுத்தி வரும் முக்கலம்பாடு பங்கு என நோட்டீசில் அடிக்க வேண்டும் அப்படியே அழைக்கவும் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



