நித்திரவிளை, ஜூன் 28 –
குமரி மாவட்டம் ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட தேசிய சுகாதார முகமை நிதியிலிருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. பல மாதங்கள் கடந்த பின்பும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே புதிய கட்டிடங்களை திறக்க கேட்டும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து அனைத்து வசதிகளும் கூடிய முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மெது கும்மல் வட்டார குழு சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மங்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார் மற்றும் வட்டார செயலாளர் தங்கமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், லாரன்ஸ், முன்னாள் மங்காடு ஊராட்சி தலைவர் ரீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.