நாகர்கோவில், ஜூலை31 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியினை பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு வழங்கி ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெறலாம்.
இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் தாட்கோ நிறுவனம் மூலமாக வழங்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.