சேலம், ஜூலை 09 –
சேலம் மாவட்டம் ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை மற்றும் கோவை ராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா இன்று காலை திருவாக் கவுண்டனூர் ஜி.வி.என் கல்யாண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமை தாங்கினார். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.டி.ஆர் சந்திரன் வரவேற்று பேசினார். பொது செயலாளர் கோவை ரவிக்குமார், நிதி செயலாளர் பெருமாவளவன், மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீதர், குட்டி வெங்கடேஷ், ஏசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார். முடிவில் மாநகர மகளிர் அணி செயலாளர் கல்யாணி நன்றி கூறினார். இதில் ம.திமு.க. மாநகர செயலாளர் அருள்மாது, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவது குறித்து மக்களிடம் எடுத்து கூறி ஓரணியில் தமிழ்நாடு என்று தி.மு.க. முன்னெடுத்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக 2026-ல் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள். தி.மு.க. அரசை எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாது. சர்வதேச நாடுகளுடன் தான் ஒப்பிட முடியும். தி.மு.க. அரசின் ஆட்சி அந்த அளவிற்கு உள்ளது. இவ்வாறு கூறினார்.