நாகர்கோவில், செப்டம்பர் 9 –
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பே- வார்டு இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.25 கோடியில் கட்டண சிகிச்சை வாடு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளி, உடன் இருப்பவர், படுக்கை வசதி, குடிநீர், வெண்ணீர், சோபா செட், நோயாளியின் அருகில் உணவருந்தும் மேஜை, டிவி, ஏசி ரூம்கள், தனி வார்டு வசதி, இணைய சேவை வசதி, தனி கழிப்பறை மற்றும் குளியலறை, 2 இருக்கைகள் (பிளாஸ்டிக் சேர்), அலமாரி உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.
இந்த கட்டண சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. கட்டண நிர்ணயம் தொடர்பான அறிவிப்பு வராததால் தாமதம் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷராஜன், சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை சந்தித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பே – வார்டை திறக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கோரிக்கை மனுவையும் அளித்தார்.
உடனே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை டீனை தொலைபேசியில் அழைத்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியம், பே-வார்டை உடனே திறந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து பே-வார்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பே-வார்டு கட்டணம் முறையே ரூ. 1000, 1200, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


