கடலூர், ஜூலை 9 –
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் நிகழ்ந்த ஒரு பயங்கர விபத்தில் ரயில்வே கடவுப்பாதையை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர்கள் தூக்கி வீசப்பட்ட இரு மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் – மாயவரம் பேசஞ்சர் ரயில் செம்மங்குப்பம் அருகே கடந்து செல்லும் போது திறந்த நிலையில் இருந்த லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது நேரடியாக மோதியது. இந்த விபத்தில் மாணவச் செல்வங்கள் நிவாஸ் மற்றும் சாருமதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி ரயில்வே கேட் கீப்பர் தனது கடமையில் அலட்சியம் காட்டி கதவை மூடாமல் இருந்தது தான் விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. சம்பவத்தின் போது கேட் கீப்பர் தூங்கிக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை மற்றும் படுகாயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரு வருடத்துக்கு முன்னர் அந்த இடத்தில் சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டும் மாவட்ட நிர்வாக அனுமதி இன்றி அது அமல்படுத்தப்படவில்லை எனும் செய்தியும் வெளியாயுள்ளது.
இதன் பின்னணியில் மாநிலம் முழுவதும் ஆளில்லா கடவுப்பாதைகள் மூடப்பட்டதைப் போல மீதமுள்ள இடங்களிலும் மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சோகம் அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.