நாகர்கோவில் ஜூன் 23
கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் பகுதியில் அரசு ரப்பர் தோட்டம் அமைந்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அதிகாலை ரப்பர் பால் வெட்டுவதற்காக தொழிலாளிகள் இங்கு செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் யானைகளை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். எனவே அதிகாலை பொதுமக்கள் இப்பகுதிக்கு செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் கோதையார் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளியான மணிகண்டன் (55) என்பவர் தனது மனைவி பிளாரன்ஸ் மேரியுடன் நேற்று அதிகாலை ரப்பர் பால் வெட்டுவதற்காக சென்று உள்ளார். அப்போது மோதிரமலை பகுதியில் இருவரும் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு மறைந்திருந்த யானைக் கூட்டம் ஒன்று திடீரென மணிகண்டனை தாக்கி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதைக் கண்டு அலறி அடித்தபடி பிளாரன்ஸ் மேரி அங்கிருந்து தப்பி ஓடியதால் அவர் உயிர் தப்பினார். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற அரசு ரப்பர் தோட்ட அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.