நாகர்கோவில், டிசம்பர் 1 –
நாகர்கோவில் வடக்கு சூரங்குடி அருகே தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (50). செட்டிகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே செட்டிகுளம் பணிமனை டிரைவர்கள், நடத்துனர்களுடன் இன்று காலை எஸ்.பி. இடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் செட்டிகுளம் பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 29ம் தேதி இரவு தடவியல் 38சி பேருந்தை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு, போழிக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தேன். அப்போது வட்டகரை பாலம் தாண்டி செல்லும்போது எதிர் திசையில் இருந்து ஒரு பைக்கில் தம்பதியினர் வந்தனர்.
அந்த பைக்கை மேல ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முந்தி செல்லும்போது, முன்னாள் சென்ற பைக்கில் தட்டி நான் ஓட்டிச் சென்ற பஸ்ஸில் சிக்கி இறந்தார். கீழே விழுந்த தம்பதியினர் பைக்கை எடுத்து சென்று விட்டனர். இந்த நிலையில் ஈத்தாமொழி போலீசார் எனது மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய தம்பதியினரிடம் உண்மை தன்மையை விசாரித்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


