சிவகங்கை, ஜூன் 25 –
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தேசியத்தலைவர் இராஜேந்திரன் ஆலோசனையின்படி சிவகங்கை மாவட்ட முதற்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக்கூட்டத்தில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து உறுப்பினர்கள் அறிமுகம் நடைபெற்றது. சங்கத்தின் தேவை என்ன, சங்கம் ஏன் தொடங்கவேண்டும் என்பதற்கான விளக்கத்தை மாவட்ட செயலாளர் ரவி விளக்கிக்கூறினார். மாவட்டப் பொருளாளர் ஏகநாதன் வரவு – செலவு அறிக்கை வாசித்தார்.
அதனைத்தொடர்ந்து தேசியத்தலைவர் இராஜேந்திரன் தலைமையில் சங்கத்தின் முந்தைய செயற்பாடுகளையும் சாதனைகளையும் சேவைகளையும் தற்போதைய தேவைகளையும் வருங்கால நோக்கங்களையும் எடுத்துரைத்த மாநில துணைத்தலைவர் முத்தமிழ் அரசன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து சங்கத்தின் உடனடி நோக்கங்களை 6 தீர்மானங்களாக மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் விரித்துரைத்தார். தீர்மானங்கள் ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கரவொலியெழுப்பி ஒப்புதல் அளித்தனர்.
தீர்மானம்-1: தேர்தல்கால வாக்குறுதிப்படி, தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், பல்வேறு இனங்களின் அடிப்படையில், சிறந்த பலன்கள் கிடைக்கும் வகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைத்திட்டதற்கு அவரைப் பாராட்டி தீர்மானம் ஏகமனதுடன் நிறைவேற்றப்பெறுகிறது.
தீர்மானம்-2: தற்பொழுது வழங்கப்பட்டுவரும் இலவச பேருந்து பயண அட்டை வட்டார மற்றும் தொகுதி உள்ளிட்ட அனைத்து செய்தியாளர்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் செல்லும்வண்ணம் வழங்கிடவேண்டி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பெறுகிறது.
தீர்மானம்-3: நலவாரிய அட்டை வழங்காதவர்களுக்கு உடனடியாக நலவாரிய அட்டை வழங்கிடவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு உரிய சலுகைகளை உரியவர்களுக்கு வழங்கிடவும் காலமுறை இதழ் பத்திரிக்கையாளர்களையும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்திடவும் ஆவன செய்யவேண்டும் என்ற தீர்மானம் அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பெறுகிறது.
தீர்மானம்-4: தற்பொழுது வழங்கப்பெற்றுவரும் ஓய்வூதியம் ரூ.12,000 என்பதை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கிடவும் அதேபோல் குடும்ப ஓய்வூதியம் ரூ.6000 என்பதை ரூ.7500 ஆக உயர்த்தி வழங்கிடவும் அதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்திடவும்வேண்டி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பெறுகிறது
தீர்மானம்-5: அரசு விதிகளுக்குட்பட்டு அரசு வழிகாட்டு மதிப்பீட்டினடிப்படையில் (Government Guideline Value) வழங்கப்பெற்ற வீட்டுமனையினைப் பெறாமல் விடுபட்டுபோன பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் 3 சென்ட் இடம் உரிய விதிகளின்படி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இடங்களில் அல்லது அதன் அருகில் உடனடியாக வழங்கிடவேண்டியும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பெறுகிறது.
தீர்மானம்-6: பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தினை உடனே இயற்றி பத்திரிக்கைத் துறையினரை பாதுகாக்கவேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பெற்றது.
மேற்கூறிய தீர்மானத்தின்மீதான கருத்துக்களை துணைத்தலைவர் திருமாறன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தனர். மேற்கண்ட தீர்மானங்களை துறைசார் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர், துறை அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோருக்கு அஞ்சல்மூலம் அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்வின் நிறைவில் துணைச் செயலாளர் முத்து நன்றி தெரிவித்தார்.