பரமக்குடி, ஜூலை 24 –
பரமக்குடியில் அதிமுக, திமுக கட்சிகளுக்கும் இடையே கட்சியில் ஆட்களை சேர்ப்பதில் போட்டோ போட்டி ஏற்பட்டு வருகிறது. திமுக சார்பில் ஓரணியில் தமிழகம் திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை முகாமினை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தலா 30% ஓட்டுக்களை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் போட்டி போட்டு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக நகர் செயலாளராக பொறுப்பேற்றுள்ள வின்சென்ட் ராஜா உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திமுக இளைஞர்கள் மற்றும் நகர நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருகிறார். ஒரு படி மேலே சென்று திமுக கவுன்சிலரை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்த்துள்ளார். திமுகவில் உறுப்பினர் சேர்க்கை துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் திமுக உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலரை அதிமுகவில் இணைத்துள்ளார் .
இதனைத் தொடர்ந்து திமுக தலைமையில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலரை திமுக தரப்பில் திமுகவில் இணைத்தனர். இதற்கு பதிலடி காட்டும் விதமாக நேற்று நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் வின்சென்ட் ராஜா அதிமுகவில் இருந்து வந்தவர்கள் செந்தில் பாலாஜி, வேலு, சேகர் பாபு, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இவர்கள்தான் இப்பொழுது திமுகவில் பெரும் ஆளுமைகளாக உள்ளனர். அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்பது திமுகவினர் மறந்திட வேண்டாம். அதிமுக கட்சியிலிருந்து கவுன்சிலர்களை திமுகவில் இணைத்து விடலாம் என நினைத்தால் திமுகவில் 10 பேரை அதிமுகவில் இணைப்பேன் என பகிரங்கமாக சவால் விட்டார். மாவட்ட திமுக எம்எல்ஏ நகர்மன்ற தலைவர்களுக்கு சவால் விட்டுள்ளார்.
மேலும் பரமக்குடிக்கு 30-ம் தேதி வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 3 கவுன்சர்களை அதிமுக கட்சியில் இணைப்பேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என ஆவேசமாக பேசி உள்ளார். இதனால் அதிமுக அதிமுக கீழே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.