ஈரோடு, செப்.14.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நஞ்சைபுளியம்பட்டி கிராமம் மற்றும் பவானி ஆற்றின் வலது, இடது கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது சிலைகள் கரைக்கும் இடங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சிலை கரைப்பு நிகழ்வின்போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பவானி ஆற்றின் நீர்வரத்து மற்றும் கரைப்பகுதிகளின் பாதுகாப்பு நிலை குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



