நாகர்கோவில், ஆகஸ்ட் 22 –
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் வியாபாரிகள் சிலர் நடமாடும் (கை வியாபாரமாக) கடலை மிட்டாய், இஞ்சி மிட்டாய் மற்றும் கடலை வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென இந்த வியாபாரம் செய்ய நாகர்கோவில் மாநகராட்சியால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து வியாபாரிகள் தரப்பில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்தை சந்தித்து நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் நடமாடும் கை வியாபாரம் செய்ய நாகர்கோவில் மாநகராட்சி மூலம் அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு கொடுத்தனர்.
இது குறித்து தளவாய் சுந்தரம் உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் மேற்கூறிய நடமாடும் கை வியாபாரம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை நாகர்கோவில் மாநகராட்சி நீக்கி மீண்டும் வியாபாரத்தை தொடர்ந்து நடத்திட அனுமதி வழங்கி உள்ளது.
இதற்காக நடமாடும் வியாபாரிகள் 18 பேர் தளவாய் சுந்தரத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வர்த்தக அணி இணை செயலாளர் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளருமான அக்சயா கண்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.



