தருமபுரி, ஆகஸ்ட் 01 –
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் பிலிகுண்டு பகுதியில் உள்ள காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதியை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக மாநில அவைத்தலைவர் இளங்கோவன், மாநில இளைஞரணி செயலாளர் பிரபாகரன் விஜயகாந்த், மாநிலங்களவை உறுப்பினர் சுதீஷ், கூட்டணி கட்சி சார்பில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் மற்றும் தேமுதிக திமுக மாநில, மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



