ஈரோடு, ஜூன் 22 –
ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அசோகபுரம் தேவி மஹால் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். ராஜு தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபு வரவேற்றார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பது. கர்நாடக மாநில அரசு மேகதாது காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது அணை கட்டுவதை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி தொழில்வரி உட்பட பல்வேறு வரிகளை உயர்த்தியதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்
மேகதாவில் அணைக்கட்ட முயற்சிக்கிற கர்நாடக அரசை கண்டித்து டாக்டர் அன்புமணி ராமதாசின் நடை பயணம் நடைபெறுகிறது. வருகிற ஜூலை இரண்டாம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார் இந்த கூட்டம் சிறப்பாக நடக்க விவசாயிகளை ஒருங்கிணைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜூ பிறந்த நாள் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.



