மதுரை, ஜூன் 24 –
தமிழக முதலமைச்சர் 52வது பிறந்தநாளையொட்டி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டனர். முன்னாள் அண்ணா தொழிற்சங்க மாநிலப் பேரவைத் தலைவரும், தற்போதைய தவெகவில் இணைந்தவருமான தாடி ம. இராசு தலைமையில், இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் பெயரில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டு, அங்கு வருகை தந்த பக்தர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதேபோல் மதுரை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் மதுரைப் போக்குவரத்து மண்டலத்தைச் சேர்ந்த ராஜேஷ் சரவணன், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அரிஜன் சேவக் சங் நினைவுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாலை நேரச் சிற்றுண்டியும், இரவு உணவும் வழங்கப்பட்டன. இந்நிகழ்விலும் மதுரை மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது விருதுநகர், கோவை, திருவண்ணாமலை போன்ற மண்டலங்களிலும் நடைபெற்றது.



